Saturday, December 6, 2008

அமெரிக்கா அனுபவம் -1

முத முதல்ல அமெரிக்கா வந்து இறங்குனது அட்லாண்டா, ஜார்ஜியா. ஏர்போர்ட்ல இருக்குனதும் கண்ண கட்டது. அவ்ளோ பெரிசு. திக்கு திசை தெரியல. இறங்கின இடத்துலேர்ந்து மத்திய மேற்கில் நான் வேலை பார்க்கப் போகும் கம்பனி இருக்கும் ஊருக்கு போக திரும்ப வேற ஒரு பிளைட் பிடிக்கணுமாம். அப்போதைக்கு எனக்கு புரிஞ்சது விருது நகர்லேர்ந்து மதுர பெரியார் பஸ்ஸ்டாண்டுல இறங்கி அண்ணா நகர், தபால் தந்தி நகர் போக டவுன் பஸ் பிடிக்கிற மாதிரி தான் இதுவும்னு.
ஒண்ணும் பேசாம அங்கன இருந்த ஒரு வெள்ளைக்கார பாப்பா கிட்ட டிக்கட்ட காட்டினேன். அது வடகிழக்கா கைய காட்டி டிரெய்ன், நெக்ஸ்ட் கான்கேர்ஸ்ஸுன்னு ஏதோ சொன்னிச்சு. ஆனாலும் இந்த பயபுள்ளைக ரொம்ப மோசம். இந்த கான்கோர்ஸ் அங்கிறாய்ங்க, அந்த கான்கோர்ஸ் அங்கிறாய்ங்க. நமக்கு தெரிஞ்சதெல்லாம் நான் மெட்ராசுல படிச்ச ஸ்போக்கன் இங்கிலீசு கோர்சுதான். இப்பத்தான் பிளைட்லேர்ந்து இறங்கி இருக்கோம். அடுத்து பிளைட் ஏறணும்னு நினைச்சா, போயி டிரைய்னல ஏறுங்கிறாய்ங்க. ஒரு வேளை இவனையல்லாம் இது வரை பிளைட்ல கொண்டு வந்ததே போதும்னு நெனச்சிட்டாங்களோ என்னமோ? சரி சரி. நாம மட்டுமா போறோம். எவ்ளோ சனங்க போகுது. சேர்ந்து போவாம்னு மனச தேத்திகிட்டேன்.
அடுத்து, சரி ப்ளைட்டுன்னா 2 இல்ல மூணு மணி நேரத்துல அந்த ஊருக்கு போயிடும்ன்னாங்களே இப்ப டிரைய்ன்னா எவ்ளோ நேரம் ஆகுமோ? டிரைய்ன பெர்த் இருக்குமா? ரிசர்வ்டா? அன் ரிசர்வ்டா? ரெண்டு கைலயும் ரெண்டு பொட்டி, தோள்ல ஒரு லக்கேஜு. ஒரு வழியா டிரய்ன்ல ஏறினா உட்கார கூட எடமில்ல. சரி தான் இங்கயும் நம்மூரு போலத் தான். நின்னுகிட்டு தான் போகணுமாக்கும். சரி கொஞ்சம் காத்தாட நின்னுகிட்டாவது வரலாம்னு சொல்லி பொட்டிகள எல்லாம் ஒரு ஓரமா வச்சிட்டு டிரெய்ன் படியாண்ட போயி நின்னேன். எல்லாம் என்னையே ஒரு மாதிரி பாத்தாய்ங்க. அடுத்து டிங் டிங்ன்னு சத்தம். ஸ்பீக்கர்ல ஏதோ ஸ்டாண்ட் கிளியர் ஸ்டாண்ட் கிளியர்ன்னு சத்தம். நான் இருந்த பொட்டில எல்லாம் ஏதோ சொல்றாங்க. என்னை பாத்து தான் சொல்றா மாதிரி இருக்கு. ஆனா எனக்கொண்ணும் புடிபடல. அப்ப ஒரு கருப்பர் என் கிட்ட வந்து "மூவ். மூவ்"ன்னாரு.
சரி தான் நம்மள நகரச் சொல்லிட்டு இவரு படிக்கட்டுல நிக்கப் போறாரு போல இருக்கு. பார்க்க ஆளு ஓங்கு தாங்கா இருக்காரு. எதுக்கு அவருகிட்ட போயி வம்புன்னு கதவாண்ட இருந்து தள்ளி வந்து நின்னேன். அடுத்த நிமிசம் டிங் டிங் சத்தமும் இல்லை. அந்த ஸ்டாண்ட் கிளியர் ஸ்பீக்கர் சத்தமும் இல்லை. கதவு வந்து சட்டுன்னு மூடிக்கிருச்சு. அப்பத்தாம் எனக்கு புரிஞ்சது. நாந்தான் அந்த கதவ மூட விடாம நின்னு கிட்டு இருந்திருக்கேன். அதாம் எல்லா சனமும் ஏதோ சர்க்கஸ்ல கோமாளிய பாத்தமாதிரி பாத்திருக்குன்னு.

1 comment: